ஞாயிறு, 10 அக்டோபர், 2010

என் ஆசிரியர்கள் .


          நேற்று நண்பன் எனக்கு போன் செய்தான், சுக விசாரிப்புகளுக்கு பிறகு மரண செய்தி ஓன்று சொன்னான். நாங்கள் ஆரம்ப பள்ளி படித்த போது எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதாக கூறினான்.
                                       சிறிது நேரம் அதை பற்றி பேசினோம். பழைய நினைவுகள் ஒவ்வொன்றை ஞாபகம் வந்தது. நாங்கள் படித்தது கிராமப்பள்ளி எல்லோரையும் போல மிட்டாய் கொடுத்து பள்ளியில் சேர்த்து விடுவர்.
                                               என்ன படித்தோம் எப்படி படித்தோம் என்ற ஞாபகம் ஒன்றும் இல்லை. எனக்கு தெளிவாக ஞாபகம் உள்ளது எல்லாம் என் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்தான். அவர் இன்றும் மனதில் இருப்பதற்கு காரணம் அவர் ஒவ்வொரு நாளும் சொல்லும் கதைகள், எல்லா வித கதைகளும் சொல்வார். மந்திர தந்திர கதைகளை அவர் சொல்லும்போது சுவாரஸ்யமாய் இருக்கும். எங்களுடைய எல்லா பாடங்களும் அவர்தான் எடுப்பார்
                                       பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வந்த பிறகும் அவரை போல யாரும் வகுப்பு எடுத்ததாக ஞாபகம் இல்லை.அவருடையான தொடர்பு நான் 5  ஆம்  வகுப்பு படிக்கும் போது மீண்டும் வந்தது அப்போது நடந்த பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் பங்கேற்க கல்லூரி பிரின்சிபால் ஆக சிறிய வேடம் தந்தனர். தினமும் ஒத்திகை நடத்துவர் நமக்கு கொடுத்த வேடம் சும்மா "இந்த மாணவனை பாராட்டுகிறேன் இவன் எதிர் காலத்தில் பெரிய ஆளாக வருவான் " என்று பேச மட்டும் தான்.அதை பேச பயிற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று தினமும் வகுப்புக்கு தலையை மட்டும் காமித்து மீதி நேரம் எல்லாம் அங்கேதான் உட்கார்ந்து கிடப்பேன். அப்போது அவர் ஒவ்வொருவருக்கும் நடிப்பு சொல்லிகொடுக்கும் அழகே அழகு.
                              பின்னர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நமக்கு கொஞ்சம் பெரிய வேடமாக கொடுத்தார்கள்.கணக்கப்பிள்ளை வேடம் அதில் காமெடியாக நடிக்க சொல்லி கொடுக்கும் போது ஒவ்வொரு வசனத்திலும் எப்படி நடிக்கவேண்டும் எப்படி ரியாக்சன் கொடுக்கணும். மேடையில் பின்புறம் காட்டி நிற்ககூடாது அடுத்த நபர் பேசும்போது அப்படி நாம மெதுவாக நடந்து வந்து இன்னொரு மைக்கின் முன்னால் வருவது, அடுத்தவர் பேசுவதற்கு மைக்கை விட்டு நளினமாக நகர்ந்து நிற்பது சிலநேரம் நாடகத்துக்கு தேவையான பொருட்களை எப்படி நாடகம் நடக்கையிலே மேடைக்கு கொண்டு வருவது என் நுணுக்கமாய் சொல்லி தருவார்.
                                                   பின் எங்களின் உடற்பயிற்சி ஆசிரியர். அவரை ஒரு நாள் நான் என் அம்மாவிடம் மாட்டி விட்டேன். அது ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்போது வீட்டில் வெள்ளியன்று சிறுவர்மலர், தங்க மலர் வெளிவரும் வீடு பள்ளிக்கு அருகில் இருப்பதால் உணவருந்த வரும்போது அதை படிக்க நான் எப்படா வெள்ளி கிழமை வரும் என்றிருப்பேன். ஒரு வாரம் ஆர்வ மிகுதியில் ஓடி வரும்போது ஒருவன் மீது மோதி கன்னத்தில் வீங்கி விட்டது. வீட்டில் அம்மா கேட்டதற்கு என்ன சொல்ல என பயந்து விளையாட்டு டீச்சர் அடித்தார்கள் என பொய் சொல்லி வைக்க எங்கம்மா பள்ளிக்கு வந்து வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார்கள் மானத்தை.
                                           மறுநாள் டீச்சர் என்னை கூப்பிட்டு நேற்று உன்னை பார்கவே இல்லையே எப்படிடா உன்னை அடிச்சிருப்பேன் எனக்கேட்டார்.நான் உண்மையே சொல்லி மேடம் இதை எங்கம்மாவிடம் சொல்லிராதிங்க இதுக்கும் சேர்த்து அடிப்பாங்க.அன்றிலிருந்து நான் விளையாட்டு வகுப்பில் விளையாடும்போது கீழ விழுந்தால் கூட கூப்பிட்டு டேய் என்னை காரணம்னு சொல்லிடாத என்பார்கள்.
                                            பின் அமைந்த ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு சம்பவங்கள் உண்டு.ஆனாலும் என்னுடைய ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை மட்டும் மறக்கவே முடியாது.இன்னும் நீங்காத நினைவில் இருக்கிறார்கள்.கிராமத்து பள்ளியில் பயின்ற என்னுள் கதை வாசிப்புகளையும் நூலகம் போவதையும் தூண்டி விட்டவர்கள் அவர்கள்தான்.
                                  அதில் ஒரு ஆசிரியர் இறந்து விட்டார் என்று கேட்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
                                          இன்றைய ஆங்கில பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவனாகிய என் மகனுக்கு கொடுக்கும் வீட்டு பாடங்களையும் புத்தகங்களையும் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது. இதில் என் மனைவி வேறு 50  க்கு  40 தாங்க எடுக்கிறான். முதல் ரேங்க் வாங்க மாட்டேன்கிறான் என்று புகார் வாசிக்கிறாள். எப்படிடா இதுவே முடியுது என்று நான் நினைத்து கொள்கிறேன் சொல்லவா முடியும் ...
                            இத்தனை பாடத்தையும் திணிக்கிறார்களே இப்ப உள்ள மாணவர்களுக்கு வருங்காலத்தில் இந்த பாடம்தான் ஞாபகம் வருமா இல்லை சொல்லிக்குடுத்த யாரவது ஞாபகத்திற்கு வருவார்களா தெரியவில்லை.

புதன், 6 அக்டோபர், 2010

கேட்டிங்களா கேட்டிங்களா எந்திரன் சினிமா விமர்சனம் கேட்டிங்களா கேட்டிங்களா

                                 
     உலக சினிமா, உள்ளூர் சினிமா கமெர்சியல் சினிமா, அவார்டு சினிமா ,மசாலா படம் .என தாறுமாறாக தரம் பிரித்து பதிவுலக அன்பர்கள் பலர்  விமர்சனம் எழுதுகிறார்கள் .

                    அதுவும் தற்போது எந்திரன் படம் வெளி வந்திருக்கிறது .அதை பற்றிய விமர்சனம் அப்படம்  வெளி வருவதற்கு முன்பும் வெளியான பின்பும் சுமார் ஆயிரம் விமர்சனமாவது வெளியாயிருக்கும் .

அவரவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துளார்கள். இதில் தவறேதும் இல்லை. இந்த பதிவுகளுக்கு பின்னூட்டத்தில் சண்டையிடும் நம் நண்பர்களை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது .

                                      அது ஒரு படைப்பு அவ்வளவுதான். அதில் குறை இருந்தாலும் நிறை இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதோ சுட்டி காட்டுவதோ அவரவர்களின் உரிமை இதற்காக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மோதிகொள்வது ஏனோ!!

எனக்கும் கருத்துகள் உண்டு. நானும் எழுதலாம் சங்கரின் படங்கள் எல்லாம் ஒரு பிரம்மாண்டம் உள்ளடங்கிய படம்களாக இருக்கும்.

ஆனால் அதனுள் சில பகுதிகள் நம்மை கட்டிப்போடும் உதாரணமாககல்வியை இலவசமாக மக்களிடம் இருத்து பிரித்து (வழக்குக்காக கோர்டில் காட்டுவது ) மக்களுக்கே கொடுப்பது போல்.. இந்தியனில் லஞ்சம் இல்லாத இந்தியா, அந்நியனில் ஜப்பான் மற்றும் சிங்கபூர் இருந்த நிலையும் இப்ப அடைந்த முன்னேற்றமும் காண்பித்திருப்பார். சிவாஜியில் மணி கார்டு திட்டம் என சின்ன சின்ன சீன்கள் வைத்து ஈர்த்தாலும் மொத்த படத்தில் அவரின் பழைய படங்களின் சாயல் தெரியும் .

                              ஆனால் தமிழ் படங்களை வெளி ஆட்கள் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் அவர் ஒருவர். ஆனால் அவருடைய ஒரே மாதிரியான படங்கள் தமிழில் வேண்டுமானால் ஏதாவது மாற்றத்துக்கு ஏங்கும் நம் மக்களிடம் ஓடும். ஹிந்தியில்??.. அவரின் நாயக் படம் ஓடாதது ஒரு உதாரணம்.இப்படியெல்லாம் நான் சங்கர் அவர்களையும் அவர் படங்களையும் விமர்சிக்கலாம் .

                                        ரஜினியை பற்றி அவர் கேரக்டர் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். மிக எளிமையானவர் படங்களில் தெளிவான பாதையில் செல்லும் அவர் வாழ்வில் சில நேரங்களில் சாரி பல நேரங்களில் ஒரு நிலையான முடிவில் அவரால் நிற்க முடிவதில்லை. காவிரி பிரச்சினையில் நெய்வேலியில் கலந்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுத்தார். பின் எதிர்ப்பை கண்டு உண்ணாவிரதம் இருந்தார். ஒகேனக்கல் பிரச்சனையில் முதலில் கர்நாடகாவில் வன்முறை செய்பவர்களை உதைப்பேன் என்றார். பின்னர் அங்குள்ள டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நான் இனிமே அப்படி மாத்லாடாது என்று பேசினார்.

தற்போது தி ரோபோட் ஹிந்தி பட விளம்பரத்திற்கு போன போது பால் தாக்கரேயை சந்தித்தது குறித்து ரஜினி கூறியதாவது:-

 நான் மும்பை வரும் போதெல்லாம் பால் தாக்கரேயை சந்திக்க நினைப்பேன். முடியவில்லை. இப்போது தான் அது நடந்துள்ளது. பால்தாக்கரே எனக்கு கடவுளை போன்றவர்.இவ்வாறு ரஜினி கூறினார்.

                இதை பற்றி முஸ்லிம்கள் யாராவது எதிர்த்தால் பல்டி அடித்து விடுவார்….இப்படியெல்லாம் தனி மனித விமர்சனம் எழுதலாம்தான்.

                                             ஆனால் ஒரு விஷயத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. என்னதான் எந்திரன் பலருக்கு பிடிக்கவில்லை எனிலும் அதற்காக உழைத்த உழைப்பு Technical விசயங்கள் ! அதை விளம்பரபடுத்த சன் டிவியின் தந்திரங்கள் எல்லாம் ..பல புதிய விசயங்களுக்கு சந்தைக்கு பாதை விரிக்கின்றது.

                                        இது வரை எழுதிய நண்பர்களின் விமர்சனம் எல்லாம் அதை மேலும் விளம்பரம்தான் படுத்துகிறது ....

இது வரை எந்திரன் பற்றி எழுதிய எழுத்துகள் எல்லாம் எந்திரனை மட்டுமோ

அது இல்லை என்றால்  அதை எழுதியவர்களை மட்டுமே பிரபல படுத்துகிறது.

                      காய்த்த மரமே கல்லெறி படும் என்ற கதைப்படி கல்லெறி விழுந்தது எல்லாம் மரத்திற்கு என்றாலும் அதில் லாபமும் அதற்குத்தான். சினிமாவை சினிமாவாக பார்க்க எல்லாம் படிக்கவேண்டும் போல இத்தனை பணம் செலவழித்து எடுத்தவர்கள் இந்த வாய்ப்பின் மூலம் உலக சினிமாவாக ஆக்கும் முயற்சில் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம் .ஆனால் போட்ட காசை எடுத்து விடுவார்கள்.

                          எல்லோரும் போல நாமும் திட்டி விட்டோ புகழ்ந்து விட்டோ எந்திரன் அலையில் நீந்ததான் போகிறோம்----)

                         இனி பதிவுலகில் அடித்துக்கொள்ள கமல் படமோ அடுத்த சூப்பர் ஸ்டார் படமோ எப்போ வருமோ  ! ????!!

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சவுதிக்காரன் வைத்த ஆப்பு

                                                     
 எல்லோருக்கும் தன் ஏமாற்றத்தையும் ஏமாந்ததையும் வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கும்தான் .அப்படி ஒரு சம்பவம் நடந்ததாலும் அதை கொஞ்சம் பில்டப் பண்ணி கௌரவமா ஏமாந்த மாதிரிதான் வெளியில சொல்வாங்க .(வேற வழி).
                               நான் அப்படியெல்லாம் இல்லாம நடந்தத சொல்றேன்  (ஹி ஹி )..நானும் எல்லோரையும் போல திரவியம் தேட Airindia  ப்ளைட்ல கடல் தாண்டி சவுதி வந்தவன்தான் . இந்த நாட்டுக்காரங்க எவனும் வேலைக்கு போக பிரியபடுறது இல்ல. (அதனாலதான நான்லாம்  இங்க வந்திருக்கேன் ) வேலைக்கு போகத்தான் மாட்டங்க ஏமாத்தறதுக்கு உட்காந்து யோசிச்சு வித விதமா திருடுறதுல கில்லாடிங்க .
                                 அப்படி திருடிய சம்பவங்களா நண்பர்கள் கூறும் போது ,அவங்கள பஞ்சர் பட்ட இடத்துலையே நம்மளும் கொஞ்சம் குத்தி விட்டுட்டு நான் மட்டும் அந்த இடத்துல இருந்துருந்தா அப்படின்னு ஒரு கதை சொல்லி நூலாக்கி அனுப்புவோம் .                                            எனக்கும் அப்படி ஒரு நிலைமை வரும்னு அப்ப யாருக்கு தெரியும் .சவுதி தேசத்தின் தலை நகரில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் இந்தியர்களில் நானும் ஒருவன் .சர்வீஸ் மட்டும் இல்லாம அவங்கவங்க ராசிப்படி ஒரு வாரமோ ஒரு மாசமோ வொர்க் பண்ணுகிற சீன தேசத்து தயாரிப்புகளையும் சேர்த்து விற்கிறோம்
சில நேரம் இந்த நாட்டு மக்கள் எந்தெந்த மாடல்களை விரும்புவாங்க என்று தெரியாம வங்கி குவித்த பொருட்கள் யாராவது கேட்டா அதை இதை சொல்லி வித்து விடுவோம் .
                              ஒரு நாள் இப்படிதான் விக்காத  ஒரு மவுச  (mouse ) ஒருத்தன் கேட்டான் அப்பாடா எப்படியாவது தள்ளி விட்ருவோம்னு நினைச்சி 25 ல ஆரம்பிச்சு 18 ரியாலுக்கு தரேன் என்று பேசி முடித்தேன் .அவன் 500  ரியால எடுத்து நீட்டினான் .இதுக்கு போய் சில்லறை கொடுக்கவா என்று நினைத்து சில்லறை மாத்திட்டு வான்னு அனுப்பினேன்.
                         வெளியில் சென்ற அவனுக்கு பதிலாக அவனோடு வந்த இன்னொருத்தன் வந்தான் . "என்னப்பா நான் சில்லறைக்கு எங்க போக ஒன்னுக்கு ரெண்டு மவுசா கொடு" என்றான் நானும்  வாயில் எச்சி வடித்து கொண்டு எப்பாடா சிக்கிட்டான் என்று ரெண்டு மௌசையும் மீதி சில்லரையும் கொடுத்தேன் .அப்ப அந்த நல்லவன் கொடுத்த சில்லறையில் 2  நூறு ரியல் நோட்டுக்கு 50 ,50 ரியலாக கேட்டான்.. கொடுத்தேன். ஒரு நூறு ரியாலுக்கு 10  ரியால் சில்லரையாக கேட்டான் அப்பவாது சுதாரிசிருக்கணும் அதையும் கொடுத்தேன். அதை என் முகத்தை நோக்கி நீட்டி இரண்டு முறை எண்ணினான் .
                                         அந்த நேரத்தில் முதலில் மௌஸ் விலை கேட்டு வந்தவன் வந்தான். சீக்கிரம் வா போனும் என்றான். அப்ப எவ்வளவுக்கு வாங்கினாய் என்று கேட்டான். அதற்கு அவன் ஒன்னு பதினெட்டு என்று ரெண்டு வாங்கினேன் என்றான். உடனே அவன் என்னது பதினெட்டா என்னிடம் பத்து ரியால் தான சொன்னான் .உன்னிடம் பதினெட்டு ரியால் என்று எப்படி வாங்கலாம் என்று சண்டைக்கு வந்தான் .
                           உடன் சில்லறை சில்லறையா கேட்டு வாங்கிய அந்த சில்லறை பய என்னிடம் திரும்பி என்னை என்ன நினைத்தாய் .எப்படி இப்படி செய்யலாம் என்று நான் கொடுத்த சில்லறையை என் முன்னே நீட்டி நீட்டி கத்தினான்  .எனக்கு சிரிப்பாக வந்தது "விளையாடாதீர்கள்" என்று கூறினேன்.  உடன் ரெண்டு பேரும் சேர்ந்து என் குடும்பத்தயே ஒவ்வருவராக  திட்டி தீர்த்தார்கள் .
                        எனக்கு கோப கோபமாய் வந்தது . டேய் இந்தாங்கடா உங்க 500 ரியால் காசு,என் சில்லறை காச கொடுங்க என்று 500 ரியாலை அவங்க மூஞ்சி மேல வீசினேன். அவங்க உடனே உன்கிட்ட எவன்டா வாங்குவான்னு சில்லறையை திருப்பி தந்துட்டு திரும்பி நடந்தார்கள் .
                                        அப்போது என் நண்பன் வந்தான் ,நான் நடந்தது எல்லாம் சொல்லி பாருடா செவிட்டு பயல்கள் 18 ன்னு சொன்னதை பத்துன்னு கேட்டு புட்டு முட்டா பயல்கள் கேவலமா திட்டிட்டு வேற போயிட்டார்கள் என்றேன் .                                                                 
                                                              இரு இரு அவங்க கொடுத்த மீதி பணத்த எண்ணி பாத்தியா அப்ப யாரு முட்டாள்ன்னு தெரியும் என்றான் .  சுரீர் என்று எனக்கு உரைத்தது என்ன பயன் ஓடி போய் காச எண்ணி பார்த்தால் ரெண்டு  50  ரியால் நோட்டும் எட்டு 10 ரியால் நோட்டு மட்டும் இருந்தது .                                                          
                                                    என் முன்னாடிதான் காச எண்ணினான் .காச நீட்டி நீட்டி பேசினான் எப்ப காச எடுத்து மாத்தினான் என்று தெரியல. .உட்கார்ந்து யோசிப்பாங்களோ!!!

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆதலால் காதல் என்பது





காதல் ஒரு மின்சார வார்த்தை . சொல்லும் போதும் கேட்க்கும் போதும் ஒரு சந்தோஷ மின்னல் ஏற்படும். எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் காதல் பாடல்கள் தான் பெரிய வெற்றியையும் அடையாளத்தையும் கொடுத்திருக்கும் .எல்லா பாடகர்களுக்கும் அங்கீகாரம் காதல் பாடல்களால் தான் ஏற்பட்டிருக்கும் .
                                பெரும்பாலும் இயக்குனர்களின் முதல் படம் காதலையே மையமாக கொண்டிருக்கும் .கதைகளில் உலகில் அதிக அளவில் வெளிவருவதும் காதல் கதைகளே .கவிதைக்கு கேட்கவா வேண்டும் காதலை பற்றி எழுதும் போது இறைவன்  கூட கீழே வைத்துதான் எழுதப் படுவான்.
                                      காதல் இல்லாத கதை இல்லை கவிதை இல்லை நாடகம் இல்லை சினிமா இல்லை .இத்தனைக்கும் உயர்ந்ததா இன்றைய காதல் .
                                        இன்றைய திரைப் படங்களில் ஐந்து வயதிலே காதல் ஏற்படுவதாகவும் அந்த காதலை சுமந்தே நாயகனோ நாயகியோ வளர்வது போலவும் தான் காண்பிக்கிறார்கள். அதையும் நாம் வாய் பிளந்து ரசிக்கிறோம் .
                                          உண்மையில் நம் குழந்தை யாரையாவது ஐந்து வயதிலே காதலித்தால் ஏற்று கொள்வோமா  ஐந்து என்று இல்லை பத்து வயதில் கூட  காதல் வருவது என்பது சாத்தியமா !!!                                                                                
                                  இன்று தனக்கு காதலனோ காதலியோ இல்லை என்றால் பெரிய குற்றம் என்பது போல் இருக்கிறார்கள் நம்  இளைய சமுதாய மக்கள். .கண்டதும் காதல் என்பது ஒரு அழகற்ற ஆணிடமோ பெண்ணிடமோ ஏற்படுகிறதா. காதலுக்கு முதல் தேவையே அழகாகத்தான் கருதப்படுகிறது .
                                             இனி பதினைந்து வயதிலே காதல் வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். அது என்ன வயது அந்த வயதில்தான் ஒரு மனிதனின் எதிர்காலமே தீர்மானம் ஆகிறது .அந்த வயதில் அவன் தேர்ந்து எடுக்கும் படிப்பும் துறையும் தான் அவன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது .
                                           இன்றைய நிலை நான் என்னை சுற்றி உள்ள என் வீட்டை சுற்றி உள்ள ஆட்களை கவனித்த உண்மை சம்பவங்களையே குறிப்பிடுகிறேன் .எனது வீட்டை அடுத்த ஒரு பெண் இல்லை சிறுமி.. அவள் படித்துக் கொண்டிருந்தது ஒன்பதாம் வகுப்பு , வீட்டின் செல்லப் பெண் அவளை சுற்றி சுற்றி ஒரு பையன் அலைந்து கொண்டிருந்தான் . அழகிய பெண் அவள் அவனோ எட்டாவதிலே மட்டையை போட்டுவிட்டு எடுபிடி வேலை பார்த்து சுற்றிக்கொண்டு இருந்த ஒரு பதினெட்டு வயதுக்காரன் .
                      எப்படியோ இவர்களுக்குள் பாழாய் போன காதல் பற்றிக் கொண்டது . அது வீட்டில் தெரிய படிப்பை நிப்பாட்ட பறவைகள் பறந்து விட்டன .. ஐந்து வருடம் கழிந்து அந்த பெண்ணை ஓரிடத்தில் பார்த்தேன் ஏதோ வேலை பார்க்கிறது போல இரண்டு குழந்தைகள் வேற அவன் என்ன செய்கிறானோ இல்லை விட்டு விட்டு போய்விட்டானோ ,,,
                                                   தெரியவில்லை. பிடித்த ஆடை பிடித்த உணவு என பார்த்து பார்த்து கொடுத்தவர்கள் பிடித்த வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுக்க மாட்டார்களா.
                                             காதல் என்றதும் ஏன் பெற்றவர்கள் பதறுகிறார்கள். காதல் கண்ணை மறைக்கும் துணையின் நல்ல விசயங்களையே மட்டுமே காட்டும்   அவன்தான் உலகில் அவன் மட்டும்தான்  நல்லவனாய்  தெரிவான் .  . நம் காதலை எதிர்ப்பவர்கள் கொலை காரர்களாக தெரியும் .ஆனால் உண்மை வேறு .
                                        உலகில் எத்தனை காதலர்கள் சந்தோசமாய் கடைசிவரை ஒன்றாக இருக்கிறார்கள்.
                                       எந்த ஒரு விசயமும் எதிர்க்கும்போதும் தடை செய்யும்போதும் தடுக்கும்போதும் அந்த விஷயம் நம்மை செய்ய தூண்டும் . அது போலத்தான் பெற்றோர்களாலும் சுற்றி இருப்பவர்களாலும் எதிர்க்கப் படுகிற காதல் நம்மை இழுக்கிறது .
                                 திடீர் என்று எல்லோ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளிடம் யாரை வேண்டுமானாலும் விரும்பு ஆனால் அவர்கள் நல்ல படித்தவர்களாக நல்ல வேளையில் உள்ளவராக இருக்கணும் நம்ம மதத்தில் இருக்கணும் நம்ம சாதிக்குள் இருக்கணும் என்று ஒரு கண்டிசனோடு காதல் செய்ய சொல்லுங்கள் அவர்கள் நீங்களே நல்ல வரனை பாருங்கள் என்று
சொல்வார்கள்
                            யாரும் இதை படிக்கும்போது இல்லை காதலுக்கு பணம் காசு ,அந்தஸ்து தகுதி எல்லாம் கிடையாது அது பார்த்து வருவது காதலே கிடையாது என்று கூறினால் அப்படி பார்த்து வந்தால் ஏன் நீங்கள் ஏற்று கொள்ளமாட்டிர்களா என்று நான் கேட்கிறேன்
                                அப்படி பார்த்து செலக்ட் செய்து தாய் தந்தை அனுமதியோடு திருமணம் செய்து கொண்டு க்ககககா காதல் செய்யுங்களேன் .
                                அப்படி திருமணம் செய்த பிறகு "நீயின்றி  நிலவில்லை " என்று பாடி உங்கள் துணையினோடு காதல் செய்யுங்கள்
                                           நான் ஒன்னும் காதலுக்கு எதிரி அல்ல காதல்களும் காதலர்களும் எனக்கு விரோதிகளும் அல்ல .
                                        காதல் அது புனிதமானது என்று கூறி அந்த பெயரில் வீட்டை விட்டு ஓடி கஷ்டப்பட்டு பொருளாதார பலமில்லாமல் குழந்தைகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கும் நல்ல உணவும் கல்வியும் அளிக்க முடியாமல் .இல்லை ஏமாற்று பேர்வழியை நம்பி ஓடி பிள்ளை பெற்று நடுத்தெருவில் விட்டு விட்டோ குப்பை தொட்டியில் போட்டு விட்டோ ஒரு ஆதரவற்ற சமுதாயத்தை காலகாலமாக காதல் என்ற பெயரில் உருவாக்கும்
அற்பக் கூட்டத்தைதான் எதிர்க்கிறேன்
                                              இன்றைய சமுதாயம் சினிமாக்களையும் சீரியல்களையும் அதில் காட்டப்படும் காதல்களையும் கண்டு நாமும் காதலிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் பட்டவர்கள் போல் நடந்து கொள்வதை கடந்து ஓர் ஜப்பானை போல தொழில்நுட்பத்திலும்  சீனாவை போல புதிய புதிய தொழில் செய்து வேலை வாய்ப்பை பெருக்கி வருமானத்தையும் வசதிகளையும் பெருக்கி தாங்கள் விரும்பிய பெண்ணையோ ஆணையோ முறையே கேட்டு எல்லோரின் முன்னிலையில் திருமணம் செய்து சாகும் வரை ஒன்றாய் இருந்து காதல் செய்து வாழனும் என்பதே ஏன் ஆசை .
                                     கலை படைப்பாளிகளே உங்களிடம் ஒரு கோரிக்கை  உங்கள் கதைகளும் படம்களும் காதலை மட்டும் கருவாக கொள்ளாமல் பல வித சிந்தனைகளையும் மாற்றத்தையும் கொண்டுவரக் கூடியதாகவும்  இளைய சமுதாயத்தை நேர்வழியில் நடந்த கூடியதாகவும் இருக்கட்டும் அதை விட்டு கல்லாவை நிரப்ப எதையும் காட்ட துணியாதிர்கள்.



                                                          

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒதுக்கப்பட்டவர்கள்

                                                       
 சற்று நாட்களுக்கு முன்பு என் பள்ளி தோழன் ஒருவனை கண்டேன்என்னால் நம்பவே முடியவில்லை .பள்ளியில் எல்லா ஆசிரியிர்களிடமும்மானாவாரியாக திட்டு வாங்குபவன் அவன் .தினமும் எதாவது ஒரு பிரச்சனயில்மாட்டிக் கொள்வான்.
                                   ஒரு முறை ஒரு தேர்வுக்கு முன்பு தலைமை ஆசிரியர் அக்கறையாக அறிவுரை கூறிக்கொண்டிருந்த போது சிரி சிரி என கொஞ்சம் ஓவராக சிரித்து விட அசெம்ப்ளி ஹாலில் துரத்தி துரத்தி அடித்தார் .
                                          எல்லாரிடமும் உருப்பட மாட்டன்னு பேரு வாங்கியவன் இன்று சவுதியில் 20 பேரு வேலை பார்க்கிற சூப்பர் மார்க்கெட்டின் முதலாளி .இதை நான் பொறாமையில் சொல்லவில்லை அவனிடமே கேட்டேன் டேய் இப்ப உன்னை பார்த்தால் நீயெல்லாம் வாழ்க்கையில் எப்படிரா முன்னேருவ என்று கேட்ட எல்லாரும் ஆச்சரிய படுவாங்கன்னு அதற்கு அவன் கூறிய பதில்தான் இந்த பதிவே எழுத காரணம்.

என்னடா பண்றது எனக்கு மனப்பாடம் பன்ற சக்தி குறைவு .நானும் கஷ்டப்பட்டு படிப்பேன் எந்த கேள்விக்கு எப்படிபதில் எழுதனும்னு தெரியாது அதுவுமில்லாம எதை படிக்கணும் எதை படிச்சா ஈசியா நல்ல மார்க் வாங்கலாம்ன்னு தெரியாது .
                                                             எங்க அப்பா வெளிநாட்டுல இருந்தாரு எங்கம்மாவுக்கு என்னை நிறைய படிக்க வைக்கணும்ன்னு ஆசை . கிராமம் இப்ப மாதிரி சொல்லிதர ஆளில்ல என்றான்.
                                        ஊருல எந்த பொறுப்பான வேலைன்னாலும் என்கிட்டதான் சொல்வார்கள் அந்த அளவு பொது அறிவு இருந்த எனக்கு . நம்ம நாட்டு படிச்சுட்டு ஒப்பிக்கிற பாடத்திட்டம் ஒன்னும் சரி வரல .
ஏதோ
 எங்கப்பா வெளிநாட்டுல இருந்ததால நான் இங்கே வந்தேன் இங்கே என்னோட பொறுப்பான நிர்வாகம் கடின உழைப்பு எல்லாம் பார்த்த முதலாளி என்னிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார் இன்று என் நேர்மையான உழைப்பாலும் ஒரு கடை நான் எடுத்து நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளேன் என்றான்.
                                                             அது சரிதான் நம் தமிழ் நாட்டை வெளியே வந்து பாருங்கள் நல்ல ஆங்கிலம் தெரிந்தால் ஓகே இல்லை என்றால் உங்களால் இந்தியாவிற்குள்ளே எங்கே போக வேண்டும் என்றாலும் கஷ்டம்தான் 
மலையாளிகளை பாருங்கள் அவர்களுக்கு பள்ளி பாடத்திலே ஹிந்தி வருவதால் வெளிநாடுகளுக்கு வந்தால் ஈசியாக நம் அயல் தேச வாசிகளை (பாகிஸ்தான் , நேபாளம் ,பங்களாதேஷ் ,ஆப்கானிஸ்தான் என ) பேசி சமாளிப்பார்கள் .அதன் மூலம் நல்ல உயர் பதவிகளுக்கு வந்து விடுவார்கள் .
                                                     நாம் தமிழை வளர்க்கிறோம் என்று ஹிந்தியை எதிர்த்தோம் சரி ஆனால் அதை படிக்காமலே விடசெய்யபட்டோம் ஏனோ தெரியவில்லை .
                                                       இன்று நாடாளுமன்றத்திற்கு போகும் நம் எம் பிக்கள் கூட ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் சரி அது எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் நம் ஆட்களுக்கே புரிந்ததோ என்னவோ ( எழிதி கொடுப்பதை தானே படிக்கிறார்கள் ).வட இந்தியாவில் என்ன எல்லா பகுதிகளிலும் படித்தவர்கலையா எம் பியாக தேர்ந்து எடுக்கிறார்கள் ஒரு நாள் நேஷனல் டிவி பாருங்கள் பார்லிமண்டில் என்ன நடக்கிறது என்று
                                                      3  idiots  படத்தில் வருவது போலத்தான் நம் கல்விமுறையும் இருக்கிறது .உதரணத்திற்கு நமது அண்ணா பல்கலை கழகத்தால் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கையே 200 தாண்டும் (உதவி : http://www.winentrance.com/engineering_colleges/tamil_nadu/  )  ஒவ்வொரு கல்லூரியிலும்  ஆண்டுக்கு எத்தனை பேர் வெளியாகிறார்கள் அத்தனை பேருக்கும் வேலைக்கு எங்கே போவது தமிழ் நாட்டுக்குள்ளே எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுமா யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லவேண்டாமா பின் எப்படி தமிழ் மொழி மட்டும் போதும் .
                                           நம் மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது ஒருத்தர் தன் பிள்ளையை பொறியியல் கல்லூரியில் சேர்த்தால் நாமும் சேர்த்து விடுவது .அதுவும் கம்ப்யூட்டர் துறையை தவிர இன்ன பிற துறைகள் திரும்பி கூட பார்க்க கூடாது அதை பற்றி எழுத வேறு பதிவில் பார்க்கலாம்
என் நண்பன் கதைக்கு வருவோம் அவன் வெளி நாட்டிற்கு வந்தான் பணம் அந்தஸ்து எல்லாம் பெற்றுக்கொண்டான் அதற்காக அவன் இழந்தது அதிகம் என்றாலும் இன்று நல்ல நிலையில் இருக்கிறான்
அவனைப் போலவே இருந்த என் பள்ளித் தோழர்கள் பல பேர் இன்று அடிமட்ட கூலித் தொழிலாளியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
                                       சொல்லிக் கொடுத்ததையும் எழுதி கொடுத்ததையும் திருப்பி எழுதினால் சிறந்த மாணவர்கள் என்ற தேர்வுமுறை மாறி வாழ்க்கைக்கு பயனாகிற முறையில் பாட முறை என்று வருமோ தெரியவில்லை .
                                           மனப்பாடம் செய்து எழுதி வெற்றி பெற்ற முந்தைய சமுதாய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அதில் சிறந்தவர்களாக வளர்த்து விடுகிறார்கள் .
                                    இவ்வாறு உருவாகிய சமுதாயம் எங்கே புதிய முறையில் சிந்திக்கும் இதனால் கிடைத்த அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் (எல்லாருமல்ல ) எங்கே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வார்கள்.
                                    தானே சிந்திக்கவும் தானே செயலாற்றவும் செய்யும் பாட முறையும் வாழ்க்கை முறையும் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கும் காலம் விரைவில் வரும். ---)
                                                                                         

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

என் முதல் கதை

                                                     சில்லறை காசு

இப்படி ஒரு நிலைமை  எனக்கு வரும் என்று  நினைக்கவே இல்லை .
வெளியூர் வந்து படிக்கும் நாம் பாக்கெட்டில் ஒரு நூறு ரூபாயாவது  வைத்து இருக்க வேண்டும் என்று கூறுவான் என் நண்பன் .
                                      என்னால் முடிந்த அளவு பத்து ரூபாயாவது வைத்திருப்பேன் . இன்று என் மதிய உணவை காலையிலே நண்பர்கள் உண்டுவிட்டார்கள் . காண்டீனுக்கு சென்றதில் என்னிடம் இருந்த காசு முழுவதும் காலி .பின் குமாரிடம் 10 ரூபாய் வாங்கி கொண்டு வந்தேன் .
                                    எனது கல்லூரியில் இருந்து எனது ஊருக்கு செல்ல இரண்டு பஸ் மாறி போக வேண்டும் .3.50    ,3.50  என 7  ரூபாய் போதும் பஸ்சுக்கு . 
                              மாலை கல்லூரி முடிந்து பேருந்து நிலையம் வந்ததும் ஒரு தேநீர் அருந்தினேன். நான் செய்த பெரிய தவறு அதுதான் .என்னிடம் இப்போது எட்டு ரூபாய் இருந்தது.
                                                    பேருந்து வந்தது  ஏறிக்கொண்டேன் .அது வரை அந்த பேருந்தில் பார்க்காத கண்டக்டர்  இருந்தார் . "சில்லறை எடுத்து வைச்சுகோங்க ,சில்லறை எடுத்து வைச்சுகோங்க" என்றவாறு முன்னால் இருந்து பின்னோக்கி வந்தார் .நான் ஐந்து ரூபாயை நீட்டினேன் ."50  பைசா இருக்கப்பா" என்றார் ." இல்லை சார் " என்றேன் ." சில்லறையா கொண்டு வரலாம் இல்ல  " என்றவாறு டிக்கெட்டை தந்து விட்டு முன்னோக்கி சென்று விட்டார் .
                                                      நான் வசதியாக ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டேன் . எனது நிறுத்தம் வருவதற்கு இடையில் ஒரு ஏழு நிருத்தமாவது இருக்கும் .
                                    நேரம் ஆகியது பஸ் ஒவ்வொரு இடமாக கடந்து
சென்றது .கண்டக்டர் முன்னுக்கும் பின்னுக்கும் சென்றுகொண்டு
இருந்தார் .
                      என் ஸ்டாப் நெருங்க நெருங்க மெல்ல எனக்கு ஒரு பயம் வந்தது .கண்டக்டரிடம் மெதுவாக " சார் சில்லறை தரலை "
என்றேன் "தர்ரேன்ப்பா " என்று நகர்ந்து சென்று விட்டார் .
                                           இது மாதிரி தர்ரேன் தரேன்  என்று தராமல் விட்ட சம்பவம் எனக்கு பல முறை நிகழ்ந்து உள்ளது .மற்ற நேரங்களில் பரவாயில்லை இன்றோ அந்த மீத சில்லறை கிடைத்தால்தான் அடுத்த பஸ்ஸில் டிக்கெட் எடுக்க முடியும் .
                       கண்டக்டரையே பார்த்து கொண்டிருந்தேன் .. ம் ஹூம்
அவர் சில்லறை தர்ற எண்ணத்திலே இல்லை போல என்னுள் கோபம் கிளம்பியது "ஏன்டா இப்டி இருக்கிங்க உங்களுக்குத்தான்  சம்பளம் தருகிறார்களே பின்ன எதற்கு இப்படி மீதி காசெல்லாம்
ஆட்டையை போடுகிறீர்கள் " என்று  நினைத்து கொண்டேன் .
                                                 கண்டக்டரை பார்த்தேன் ஆள் பார்க்க நீட்டாக இருந்தார் ."இப்படி பிழைப்பதற்கு பிட்சை எடுக்கலாம் " என்று  சொல்ல தூண்டியது மனது .
                                                         மாலை நேரம்  என்பதால் கல்லூரி பெண்கள் கூட்டமாய் இருந்தது இனி இந்த ஆளிடம் மீதி காசு கேட்டால் கேவலம் பட வேண்டி வரும் என்று நினைத்து கொண்டேன் .
                 அடுத்தது என் நிறுத்தம்தான் . சரி இன்னிக்கி நட ராஜா சர்வீஸ் தான் என்று முடிவெடுத்து கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து வாசலுக்கு வந்து நின்று கொண்டேன் .
                         என் நிறுத்தம் வந்தது கடைசியாக கண்டக்டரை பார்த்தேன் அவர் முன்னே யாருக்கோ டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார் .பேருந்து நின்றது நான் இறங்கி கொண்டு எதிர் திசையில் நடக்க ஆரம்பிதேன்.
                               கிளம்பிய பேருந்து  சிறிது தூரம் சென்று நின்றது நான் அதை கவனிக்க வில்லை . பேருந்தில் இருந்து இறங்கிய கண்டக்டர் என்னை நோக்கி தம்பி என்று கத்திய போதுதான் நான் திரும்பி பார்த்தேன் . கண்டக்டர் என்னை நோக்கி ஓடி வந்தார் .
என்னிடம் வந்து ஐந்து ரூபாயை நீட்டி " தம்பி சில்லறை இல்ல இதை வைத்துகொள்  வேறு காசு வைத்து இருக்கியோ என்னவோ நாளை வரும்போது சேர்த்து தா " என கூறி விட்டு பஸ்ஸை நோக்கி ஓடிச்  சென்றார் .
                                         பஸ் கரி புகையை என் மூஞ்சியில் தட்டியவாரே கிளம்பி சென்றது .நான் முழி பிதிங்கி நின்று கொண்டிருந்தேன் .

                     
                  

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அதிரடியாக ஆடை அணிவது என்பது என்பது இதுதானோ