சில்லறை காசு
இப்படி ஒரு நிலைமை எனக்கு வரும் என்று நினைக்கவே இல்லை .
வெளியூர் வந்து படிக்கும் நாம் பாக்கெட்டில் ஒரு நூறு ரூபாயாவது வைத்து இருக்க வேண்டும் என்று கூறுவான் என் நண்பன் .
என்னால் முடிந்த அளவு பத்து ரூபாயாவது வைத்திருப்பேன் . இன்று என் மதிய உணவை காலையிலே நண்பர்கள் உண்டுவிட்டார்கள் . காண்டீனுக்கு சென்றதில் என்னிடம் இருந்த காசு முழுவதும் காலி .பின் குமாரிடம் 10 ரூபாய் வாங்கி கொண்டு வந்தேன் .
எனது கல்லூரியில் இருந்து எனது ஊருக்கு செல்ல இரண்டு பஸ் மாறி போக வேண்டும் .3.50 ,3.50 என 7 ரூபாய் போதும் பஸ்சுக்கு .
மாலை கல்லூரி முடிந்து பேருந்து நிலையம் வந்ததும் ஒரு தேநீர் அருந்தினேன். நான் செய்த பெரிய தவறு அதுதான் .என்னிடம் இப்போது எட்டு ரூபாய் இருந்தது.
பேருந்து வந்தது ஏறிக்கொண்டேன் .அது வரை அந்த பேருந்தில் பார்க்காத கண்டக்டர் இருந்தார் . "சில்லறை எடுத்து வைச்சுகோங்க ,சில்லறை எடுத்து வைச்சுகோங்க" என்றவாறு முன்னால் இருந்து பின்னோக்கி வந்தார் .நான் ஐந்து ரூபாயை நீட்டினேன் ."50 பைசா இருக்கப்பா" என்றார் ." இல்லை சார் " என்றேன் ." சில்லறையா கொண்டு வரலாம் இல்ல " என்றவாறு டிக்கெட்டை தந்து விட்டு முன்னோக்கி சென்று விட்டார் .
நான் வசதியாக ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டேன் . எனது நிறுத்தம் வருவதற்கு இடையில் ஒரு ஏழு நிருத்தமாவது இருக்கும் .
நேரம் ஆகியது பஸ் ஒவ்வொரு இடமாக கடந்து
சென்றது .கண்டக்டர் முன்னுக்கும் பின்னுக்கும் சென்றுகொண்டு
இருந்தார் .
என் ஸ்டாப் நெருங்க நெருங்க மெல்ல எனக்கு ஒரு பயம் வந்தது .கண்டக்டரிடம் மெதுவாக " சார் சில்லறை தரலை "
என்றேன் "தர்ரேன்ப்பா " என்று நகர்ந்து சென்று விட்டார் .
இது மாதிரி தர்ரேன் தரேன் என்று தராமல் விட்ட சம்பவம் எனக்கு பல முறை நிகழ்ந்து உள்ளது .மற்ற நேரங்களில் பரவாயில்லை இன்றோ அந்த மீத சில்லறை கிடைத்தால்தான் அடுத்த பஸ்ஸில் டிக்கெட் எடுக்க முடியும் .
கண்டக்டரையே பார்த்து கொண்டிருந்தேன் .. ம் ஹூம்
அவர் சில்லறை தர்ற எண்ணத்திலே இல்லை போல என்னுள் கோபம் கிளம்பியது "ஏன்டா இப்டி இருக்கிங்க உங்களுக்குத்தான் சம்பளம் தருகிறார்களே பின்ன எதற்கு இப்படி மீதி காசெல்லாம்
ஆட்டையை போடுகிறீர்கள் " என்று நினைத்து கொண்டேன் .
கண்டக்டரை பார்த்தேன் ஆள் பார்க்க நீட்டாக இருந்தார் ."இப்படி பிழைப்பதற்கு பிட்சை எடுக்கலாம் " என்று சொல்ல தூண்டியது மனது .
மாலை நேரம் என்பதால் கல்லூரி பெண்கள் கூட்டமாய் இருந்தது இனி இந்த ஆளிடம் மீதி காசு கேட்டால் கேவலம் பட வேண்டி வரும் என்று நினைத்து கொண்டேன் .
அடுத்தது என் நிறுத்தம்தான் . சரி இன்னிக்கி நட ராஜா சர்வீஸ் தான் என்று முடிவெடுத்து கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து வாசலுக்கு வந்து நின்று கொண்டேன் .
என் நிறுத்தம் வந்தது கடைசியாக கண்டக்டரை பார்த்தேன் அவர் முன்னே யாருக்கோ டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார் .பேருந்து நின்றது நான் இறங்கி கொண்டு எதிர் திசையில் நடக்க ஆரம்பிதேன்.
கிளம்பிய பேருந்து சிறிது தூரம் சென்று நின்றது நான் அதை கவனிக்க வில்லை . பேருந்தில் இருந்து இறங்கிய கண்டக்டர் என்னை நோக்கி தம்பி என்று கத்திய போதுதான் நான் திரும்பி பார்த்தேன் . கண்டக்டர் என்னை நோக்கி ஓடி வந்தார் .
என்னிடம் வந்து ஐந்து ரூபாயை நீட்டி " தம்பி சில்லறை இல்ல இதை வைத்துகொள் வேறு காசு வைத்து இருக்கியோ என்னவோ நாளை வரும்போது சேர்த்து தா " என கூறி விட்டு பஸ்ஸை நோக்கி ஓடிச் சென்றார் .
பஸ் கரி புகையை என் மூஞ்சியில் தட்டியவாரே கிளம்பி சென்றது .நான் முழி பிதிங்கி நின்று கொண்டிருந்தேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக