ஞாயிறு, 10 அக்டோபர், 2010

என் ஆசிரியர்கள் .


          நேற்று நண்பன் எனக்கு போன் செய்தான், சுக விசாரிப்புகளுக்கு பிறகு மரண செய்தி ஓன்று சொன்னான். நாங்கள் ஆரம்ப பள்ளி படித்த போது எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதாக கூறினான்.
                                       சிறிது நேரம் அதை பற்றி பேசினோம். பழைய நினைவுகள் ஒவ்வொன்றை ஞாபகம் வந்தது. நாங்கள் படித்தது கிராமப்பள்ளி எல்லோரையும் போல மிட்டாய் கொடுத்து பள்ளியில் சேர்த்து விடுவர்.
                                               என்ன படித்தோம் எப்படி படித்தோம் என்ற ஞாபகம் ஒன்றும் இல்லை. எனக்கு தெளிவாக ஞாபகம் உள்ளது எல்லாம் என் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்தான். அவர் இன்றும் மனதில் இருப்பதற்கு காரணம் அவர் ஒவ்வொரு நாளும் சொல்லும் கதைகள், எல்லா வித கதைகளும் சொல்வார். மந்திர தந்திர கதைகளை அவர் சொல்லும்போது சுவாரஸ்யமாய் இருக்கும். எங்களுடைய எல்லா பாடங்களும் அவர்தான் எடுப்பார்
                                       பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வந்த பிறகும் அவரை போல யாரும் வகுப்பு எடுத்ததாக ஞாபகம் இல்லை.அவருடையான தொடர்பு நான் 5  ஆம்  வகுப்பு படிக்கும் போது மீண்டும் வந்தது அப்போது நடந்த பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் பங்கேற்க கல்லூரி பிரின்சிபால் ஆக சிறிய வேடம் தந்தனர். தினமும் ஒத்திகை நடத்துவர் நமக்கு கொடுத்த வேடம் சும்மா "இந்த மாணவனை பாராட்டுகிறேன் இவன் எதிர் காலத்தில் பெரிய ஆளாக வருவான் " என்று பேச மட்டும் தான்.அதை பேச பயிற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று தினமும் வகுப்புக்கு தலையை மட்டும் காமித்து மீதி நேரம் எல்லாம் அங்கேதான் உட்கார்ந்து கிடப்பேன். அப்போது அவர் ஒவ்வொருவருக்கும் நடிப்பு சொல்லிகொடுக்கும் அழகே அழகு.
                              பின்னர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நமக்கு கொஞ்சம் பெரிய வேடமாக கொடுத்தார்கள்.கணக்கப்பிள்ளை வேடம் அதில் காமெடியாக நடிக்க சொல்லி கொடுக்கும் போது ஒவ்வொரு வசனத்திலும் எப்படி நடிக்கவேண்டும் எப்படி ரியாக்சன் கொடுக்கணும். மேடையில் பின்புறம் காட்டி நிற்ககூடாது அடுத்த நபர் பேசும்போது அப்படி நாம மெதுவாக நடந்து வந்து இன்னொரு மைக்கின் முன்னால் வருவது, அடுத்தவர் பேசுவதற்கு மைக்கை விட்டு நளினமாக நகர்ந்து நிற்பது சிலநேரம் நாடகத்துக்கு தேவையான பொருட்களை எப்படி நாடகம் நடக்கையிலே மேடைக்கு கொண்டு வருவது என் நுணுக்கமாய் சொல்லி தருவார்.
                                                   பின் எங்களின் உடற்பயிற்சி ஆசிரியர். அவரை ஒரு நாள் நான் என் அம்மாவிடம் மாட்டி விட்டேன். அது ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்போது வீட்டில் வெள்ளியன்று சிறுவர்மலர், தங்க மலர் வெளிவரும் வீடு பள்ளிக்கு அருகில் இருப்பதால் உணவருந்த வரும்போது அதை படிக்க நான் எப்படா வெள்ளி கிழமை வரும் என்றிருப்பேன். ஒரு வாரம் ஆர்வ மிகுதியில் ஓடி வரும்போது ஒருவன் மீது மோதி கன்னத்தில் வீங்கி விட்டது. வீட்டில் அம்மா கேட்டதற்கு என்ன சொல்ல என பயந்து விளையாட்டு டீச்சர் அடித்தார்கள் என பொய் சொல்லி வைக்க எங்கம்மா பள்ளிக்கு வந்து வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார்கள் மானத்தை.
                                           மறுநாள் டீச்சர் என்னை கூப்பிட்டு நேற்று உன்னை பார்கவே இல்லையே எப்படிடா உன்னை அடிச்சிருப்பேன் எனக்கேட்டார்.நான் உண்மையே சொல்லி மேடம் இதை எங்கம்மாவிடம் சொல்லிராதிங்க இதுக்கும் சேர்த்து அடிப்பாங்க.அன்றிலிருந்து நான் விளையாட்டு வகுப்பில் விளையாடும்போது கீழ விழுந்தால் கூட கூப்பிட்டு டேய் என்னை காரணம்னு சொல்லிடாத என்பார்கள்.
                                            பின் அமைந்த ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு சம்பவங்கள் உண்டு.ஆனாலும் என்னுடைய ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை மட்டும் மறக்கவே முடியாது.இன்னும் நீங்காத நினைவில் இருக்கிறார்கள்.கிராமத்து பள்ளியில் பயின்ற என்னுள் கதை வாசிப்புகளையும் நூலகம் போவதையும் தூண்டி விட்டவர்கள் அவர்கள்தான்.
                                  அதில் ஒரு ஆசிரியர் இறந்து விட்டார் என்று கேட்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
                                          இன்றைய ஆங்கில பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவனாகிய என் மகனுக்கு கொடுக்கும் வீட்டு பாடங்களையும் புத்தகங்களையும் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது. இதில் என் மனைவி வேறு 50  க்கு  40 தாங்க எடுக்கிறான். முதல் ரேங்க் வாங்க மாட்டேன்கிறான் என்று புகார் வாசிக்கிறாள். எப்படிடா இதுவே முடியுது என்று நான் நினைத்து கொள்கிறேன் சொல்லவா முடியும் ...
                            இத்தனை பாடத்தையும் திணிக்கிறார்களே இப்ப உள்ள மாணவர்களுக்கு வருங்காலத்தில் இந்த பாடம்தான் ஞாபகம் வருமா இல்லை சொல்லிக்குடுத்த யாரவது ஞாபகத்திற்கு வருவார்களா தெரியவில்லை.

புதன், 6 அக்டோபர், 2010

கேட்டிங்களா கேட்டிங்களா எந்திரன் சினிமா விமர்சனம் கேட்டிங்களா கேட்டிங்களா

                                 
     உலக சினிமா, உள்ளூர் சினிமா கமெர்சியல் சினிமா, அவார்டு சினிமா ,மசாலா படம் .என தாறுமாறாக தரம் பிரித்து பதிவுலக அன்பர்கள் பலர்  விமர்சனம் எழுதுகிறார்கள் .

                    அதுவும் தற்போது எந்திரன் படம் வெளி வந்திருக்கிறது .அதை பற்றிய விமர்சனம் அப்படம்  வெளி வருவதற்கு முன்பும் வெளியான பின்பும் சுமார் ஆயிரம் விமர்சனமாவது வெளியாயிருக்கும் .

அவரவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துளார்கள். இதில் தவறேதும் இல்லை. இந்த பதிவுகளுக்கு பின்னூட்டத்தில் சண்டையிடும் நம் நண்பர்களை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது .

                                      அது ஒரு படைப்பு அவ்வளவுதான். அதில் குறை இருந்தாலும் நிறை இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதோ சுட்டி காட்டுவதோ அவரவர்களின் உரிமை இதற்காக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மோதிகொள்வது ஏனோ!!

எனக்கும் கருத்துகள் உண்டு. நானும் எழுதலாம் சங்கரின் படங்கள் எல்லாம் ஒரு பிரம்மாண்டம் உள்ளடங்கிய படம்களாக இருக்கும்.

ஆனால் அதனுள் சில பகுதிகள் நம்மை கட்டிப்போடும் உதாரணமாககல்வியை இலவசமாக மக்களிடம் இருத்து பிரித்து (வழக்குக்காக கோர்டில் காட்டுவது ) மக்களுக்கே கொடுப்பது போல்.. இந்தியனில் லஞ்சம் இல்லாத இந்தியா, அந்நியனில் ஜப்பான் மற்றும் சிங்கபூர் இருந்த நிலையும் இப்ப அடைந்த முன்னேற்றமும் காண்பித்திருப்பார். சிவாஜியில் மணி கார்டு திட்டம் என சின்ன சின்ன சீன்கள் வைத்து ஈர்த்தாலும் மொத்த படத்தில் அவரின் பழைய படங்களின் சாயல் தெரியும் .

                              ஆனால் தமிழ் படங்களை வெளி ஆட்கள் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் அவர் ஒருவர். ஆனால் அவருடைய ஒரே மாதிரியான படங்கள் தமிழில் வேண்டுமானால் ஏதாவது மாற்றத்துக்கு ஏங்கும் நம் மக்களிடம் ஓடும். ஹிந்தியில்??.. அவரின் நாயக் படம் ஓடாதது ஒரு உதாரணம்.இப்படியெல்லாம் நான் சங்கர் அவர்களையும் அவர் படங்களையும் விமர்சிக்கலாம் .

                                        ரஜினியை பற்றி அவர் கேரக்டர் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். மிக எளிமையானவர் படங்களில் தெளிவான பாதையில் செல்லும் அவர் வாழ்வில் சில நேரங்களில் சாரி பல நேரங்களில் ஒரு நிலையான முடிவில் அவரால் நிற்க முடிவதில்லை. காவிரி பிரச்சினையில் நெய்வேலியில் கலந்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுத்தார். பின் எதிர்ப்பை கண்டு உண்ணாவிரதம் இருந்தார். ஒகேனக்கல் பிரச்சனையில் முதலில் கர்நாடகாவில் வன்முறை செய்பவர்களை உதைப்பேன் என்றார். பின்னர் அங்குள்ள டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நான் இனிமே அப்படி மாத்லாடாது என்று பேசினார்.

தற்போது தி ரோபோட் ஹிந்தி பட விளம்பரத்திற்கு போன போது பால் தாக்கரேயை சந்தித்தது குறித்து ரஜினி கூறியதாவது:-

 நான் மும்பை வரும் போதெல்லாம் பால் தாக்கரேயை சந்திக்க நினைப்பேன். முடியவில்லை. இப்போது தான் அது நடந்துள்ளது. பால்தாக்கரே எனக்கு கடவுளை போன்றவர்.இவ்வாறு ரஜினி கூறினார்.

                இதை பற்றி முஸ்லிம்கள் யாராவது எதிர்த்தால் பல்டி அடித்து விடுவார்….இப்படியெல்லாம் தனி மனித விமர்சனம் எழுதலாம்தான்.

                                             ஆனால் ஒரு விஷயத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. என்னதான் எந்திரன் பலருக்கு பிடிக்கவில்லை எனிலும் அதற்காக உழைத்த உழைப்பு Technical விசயங்கள் ! அதை விளம்பரபடுத்த சன் டிவியின் தந்திரங்கள் எல்லாம் ..பல புதிய விசயங்களுக்கு சந்தைக்கு பாதை விரிக்கின்றது.

                                        இது வரை எழுதிய நண்பர்களின் விமர்சனம் எல்லாம் அதை மேலும் விளம்பரம்தான் படுத்துகிறது ....

இது வரை எந்திரன் பற்றி எழுதிய எழுத்துகள் எல்லாம் எந்திரனை மட்டுமோ

அது இல்லை என்றால்  அதை எழுதியவர்களை மட்டுமே பிரபல படுத்துகிறது.

                      காய்த்த மரமே கல்லெறி படும் என்ற கதைப்படி கல்லெறி விழுந்தது எல்லாம் மரத்திற்கு என்றாலும் அதில் லாபமும் அதற்குத்தான். சினிமாவை சினிமாவாக பார்க்க எல்லாம் படிக்கவேண்டும் போல இத்தனை பணம் செலவழித்து எடுத்தவர்கள் இந்த வாய்ப்பின் மூலம் உலக சினிமாவாக ஆக்கும் முயற்சில் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம் .ஆனால் போட்ட காசை எடுத்து விடுவார்கள்.

                          எல்லோரும் போல நாமும் திட்டி விட்டோ புகழ்ந்து விட்டோ எந்திரன் அலையில் நீந்ததான் போகிறோம்----)

                         இனி பதிவுலகில் அடித்துக்கொள்ள கமல் படமோ அடுத்த சூப்பர் ஸ்டார் படமோ எப்போ வருமோ  ! ????!!

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சவுதிக்காரன் வைத்த ஆப்பு

                                                     
 எல்லோருக்கும் தன் ஏமாற்றத்தையும் ஏமாந்ததையும் வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கும்தான் .அப்படி ஒரு சம்பவம் நடந்ததாலும் அதை கொஞ்சம் பில்டப் பண்ணி கௌரவமா ஏமாந்த மாதிரிதான் வெளியில சொல்வாங்க .(வேற வழி).
                               நான் அப்படியெல்லாம் இல்லாம நடந்தத சொல்றேன்  (ஹி ஹி )..நானும் எல்லோரையும் போல திரவியம் தேட Airindia  ப்ளைட்ல கடல் தாண்டி சவுதி வந்தவன்தான் . இந்த நாட்டுக்காரங்க எவனும் வேலைக்கு போக பிரியபடுறது இல்ல. (அதனாலதான நான்லாம்  இங்க வந்திருக்கேன் ) வேலைக்கு போகத்தான் மாட்டங்க ஏமாத்தறதுக்கு உட்காந்து யோசிச்சு வித விதமா திருடுறதுல கில்லாடிங்க .
                                 அப்படி திருடிய சம்பவங்களா நண்பர்கள் கூறும் போது ,அவங்கள பஞ்சர் பட்ட இடத்துலையே நம்மளும் கொஞ்சம் குத்தி விட்டுட்டு நான் மட்டும் அந்த இடத்துல இருந்துருந்தா அப்படின்னு ஒரு கதை சொல்லி நூலாக்கி அனுப்புவோம் .                                            எனக்கும் அப்படி ஒரு நிலைமை வரும்னு அப்ப யாருக்கு தெரியும் .சவுதி தேசத்தின் தலை நகரில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் இந்தியர்களில் நானும் ஒருவன் .சர்வீஸ் மட்டும் இல்லாம அவங்கவங்க ராசிப்படி ஒரு வாரமோ ஒரு மாசமோ வொர்க் பண்ணுகிற சீன தேசத்து தயாரிப்புகளையும் சேர்த்து விற்கிறோம்
சில நேரம் இந்த நாட்டு மக்கள் எந்தெந்த மாடல்களை விரும்புவாங்க என்று தெரியாம வங்கி குவித்த பொருட்கள் யாராவது கேட்டா அதை இதை சொல்லி வித்து விடுவோம் .
                              ஒரு நாள் இப்படிதான் விக்காத  ஒரு மவுச  (mouse ) ஒருத்தன் கேட்டான் அப்பாடா எப்படியாவது தள்ளி விட்ருவோம்னு நினைச்சி 25 ல ஆரம்பிச்சு 18 ரியாலுக்கு தரேன் என்று பேசி முடித்தேன் .அவன் 500  ரியால எடுத்து நீட்டினான் .இதுக்கு போய் சில்லறை கொடுக்கவா என்று நினைத்து சில்லறை மாத்திட்டு வான்னு அனுப்பினேன்.
                         வெளியில் சென்ற அவனுக்கு பதிலாக அவனோடு வந்த இன்னொருத்தன் வந்தான் . "என்னப்பா நான் சில்லறைக்கு எங்க போக ஒன்னுக்கு ரெண்டு மவுசா கொடு" என்றான் நானும்  வாயில் எச்சி வடித்து கொண்டு எப்பாடா சிக்கிட்டான் என்று ரெண்டு மௌசையும் மீதி சில்லரையும் கொடுத்தேன் .அப்ப அந்த நல்லவன் கொடுத்த சில்லறையில் 2  நூறு ரியல் நோட்டுக்கு 50 ,50 ரியலாக கேட்டான்.. கொடுத்தேன். ஒரு நூறு ரியாலுக்கு 10  ரியால் சில்லரையாக கேட்டான் அப்பவாது சுதாரிசிருக்கணும் அதையும் கொடுத்தேன். அதை என் முகத்தை நோக்கி நீட்டி இரண்டு முறை எண்ணினான் .
                                         அந்த நேரத்தில் முதலில் மௌஸ் விலை கேட்டு வந்தவன் வந்தான். சீக்கிரம் வா போனும் என்றான். அப்ப எவ்வளவுக்கு வாங்கினாய் என்று கேட்டான். அதற்கு அவன் ஒன்னு பதினெட்டு என்று ரெண்டு வாங்கினேன் என்றான். உடனே அவன் என்னது பதினெட்டா என்னிடம் பத்து ரியால் தான சொன்னான் .உன்னிடம் பதினெட்டு ரியால் என்று எப்படி வாங்கலாம் என்று சண்டைக்கு வந்தான் .
                           உடன் சில்லறை சில்லறையா கேட்டு வாங்கிய அந்த சில்லறை பய என்னிடம் திரும்பி என்னை என்ன நினைத்தாய் .எப்படி இப்படி செய்யலாம் என்று நான் கொடுத்த சில்லறையை என் முன்னே நீட்டி நீட்டி கத்தினான்  .எனக்கு சிரிப்பாக வந்தது "விளையாடாதீர்கள்" என்று கூறினேன்.  உடன் ரெண்டு பேரும் சேர்ந்து என் குடும்பத்தயே ஒவ்வருவராக  திட்டி தீர்த்தார்கள் .
                        எனக்கு கோப கோபமாய் வந்தது . டேய் இந்தாங்கடா உங்க 500 ரியால் காசு,என் சில்லறை காச கொடுங்க என்று 500 ரியாலை அவங்க மூஞ்சி மேல வீசினேன். அவங்க உடனே உன்கிட்ட எவன்டா வாங்குவான்னு சில்லறையை திருப்பி தந்துட்டு திரும்பி நடந்தார்கள் .
                                        அப்போது என் நண்பன் வந்தான் ,நான் நடந்தது எல்லாம் சொல்லி பாருடா செவிட்டு பயல்கள் 18 ன்னு சொன்னதை பத்துன்னு கேட்டு புட்டு முட்டா பயல்கள் கேவலமா திட்டிட்டு வேற போயிட்டார்கள் என்றேன் .                                                                 
                                                              இரு இரு அவங்க கொடுத்த மீதி பணத்த எண்ணி பாத்தியா அப்ப யாரு முட்டாள்ன்னு தெரியும் என்றான் .  சுரீர் என்று எனக்கு உரைத்தது என்ன பயன் ஓடி போய் காச எண்ணி பார்த்தால் ரெண்டு  50  ரியால் நோட்டும் எட்டு 10 ரியால் நோட்டு மட்டும் இருந்தது .                                                          
                                                    என் முன்னாடிதான் காச எண்ணினான் .காச நீட்டி நீட்டி பேசினான் எப்ப காச எடுத்து மாத்தினான் என்று தெரியல. .உட்கார்ந்து யோசிப்பாங்களோ!!!